Wednesday, December 31, 2008

பாடல் -10

புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்!திரு மாலாம்
அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:

எங்கும் நிறைந்த அமுதமே! சிவபெருமான் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக்கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையைத் திருமாலும், நான்முகனும் கண்டனர். மண்ணுலகத்தில் நாம் போய்ப் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோமே என்று, அவர்கள் இருவரும் ஏங்குகின்றனர்; இப்படி, திருமால் விரும்பும்படியாகவும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும், உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! பள்ளியினின்றும்
எழுந்த்தருள்வாயாக!

பாடல் -9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே! உன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:

வானுலகில் உள்ள தேவர்களும் நெருங்கவும் முடியாத மேலான மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்தவனே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே! பரம்பரை அடிமைகளாகிய எங்களுடைய கண்களுக்குள்ளே நின்று, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கித் தித்திக்கின்ற தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யு தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! எம்பெருமானே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

பாடல் -8

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?
பந்தணை விரலியும், நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளியபரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்!
ஆரமு தே!பள்ளி எழுந்தருள் வாயே!

பொருள்:

எங்கும் நிறைந்த அமுதமே! அனைத்துக்கும் முற்பட்ட முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்? இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற விரல்கள் உடைய உமாதேவியோடும், உன் அடியவர்களின் பழைய குடிசைதோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம்பொருளே! சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என் குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து, என்னை அடிமையாக ஏற்றாய்! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!

பாடல் -7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:

தேன்சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைத் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே! திருப்பெருந்துறை அரசே! உன் தன்மையாகிய அது பழச்சுவை எனவும், அமுதம் எனவும், அறிந்துகொள்ள எளிமையானது எனவும் தேவர்களும் அறியமாட்டார்கள். ஆனால், "இதுவே அவனுடைய திருவுருவம், எவனே அந்தச் சிவபெருமான்" என்று நாங்கள் சுட்டிக்காட்டிச் சொல்லும்படி கருணையுடன் எங்களை அடிமையாக ஏற்றுக்கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்! நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்! எம்ப பெருமானே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

Sunday, December 21, 2008

பாடல் -6

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டரும் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:

மனத்தின் அலைச்சல் அடங்கி, உன்னடி நாடி நிற்கின்ற உன் அன்பர்கள் உன்னை வணங்குகின்றனர். அவர்களுள் பலர் பற்று விட்ட பெண்கள். அவர்களும் சாதாரணமானவர்கள் போலவே உன்னை வணங்கி மகிழ்கிறார்கள். செந்தாமரை மலர்களும் குளிர்ந்த நீர் நிறைந்த பசுமையான வயல்களும் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே! பார்வதியின் நாயகனே! எங்கள் பிறவித் துன்பத்தை அறுத்தெறிந்து அருள் புரியப் பள்ளி எழுந்தருள்வாய்!

பாடல் -5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:


ஐம்பூதங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன், போக்கும் வரவும் இல்லாதவன் என்றெல்லாம் உன்னைப் புலவர்கள் புகழ்கின்றனர். பக்தி மேலீட்டால் சிலர் பாடுகின்றனர், சிலர் ஆடுகின்றனர். ஆனால் உன்னை நேரே பார்த்தறிந்தவர்கள் யாரையும் நாங்கள் கேள்விப்படவில்லை. குளிர்ந்த, பசுமையான வயல்கள் சூழ்ந்த, திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! நினைத்தற்கும் அருமையானவனே! நாங்கள் உன்னை நேரே காணும்படி பள்ளி எழுந்தருள்வாய்!

பாடல் -4

இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர் அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:

சிலர் வீணை, யாழ் போன்ற இசைக்கருவிகளுடன் இன்னிசை எழுப்புகின்றனர். சிலர் ரிக்வேதம் போன்ற தோத்திரங்களால் துதிக்கின்றனர், தொடுத்த மாலைகளுடன் சிலர் காத்து நிற்கின்றனர், அன்பு மேலீட்டால் சிலர் தொழுதவண்ணமும் சிலர் அழுதவண்ணமும் நிற்கின்றனர்; மகிழ்ச்சி மேலீட்டால் சிலரது தொழுத கைகள் தன் வசமிழந்து துவண்டு விட்டன. திருப்பெருந்துறைத் தலைவனே! இவர்களுக்கு அருளவும் என்னை ஆட்கொள்ளவும் பள்ளி எழுந்தருள்வாய்!